தலித்துகள் மீதான வன்கொடுமை அதிகரிப்பு விசிக சார்பில் முதல்வருக்கு வலியுறுத்தல்

தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021ம் ஆண்டிற்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக் கூடாது. முதலமைச்சர் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2019ம் ஆண்டில் 1144 குற்றங்கள் நடந்திருந்தன. 2020ம் ஆண்டில் 1274 வன்கொடுமைக் குற்றங்கள் நடந்த நிலையில் 2021ம் ஆண்டில் வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 1377 ஆக உயர்ந்துள்ளது. 2021ல் தமிழ்நாட்டில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் 123 பேர் கற்பழிக்கப்பட்டதாகவும், அதில் 89 பேர் சிறுமியர் என்றும் என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது.

தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பது என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதை முதலமைச்சர் கருத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version