சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கு இருக்கும்: தனிக் கட்சி தொடங்குகிறாரா மு.க.அழகிரி

தனிக்கட்சி தொடங்குவது பற்றி போகப் போகத் தெரியும் என மு.க.அழகிரி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவிலிருந்து 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்டவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கடந்த இரண்டு வருடங்களாக அமைதியாகவே இருந்துவந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் மீண்டும் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரை திமுக தலைமை கட்சியில் இணைத்துக்கொள்ளவில்லை.


விரைவில் தேர்தல் வரவுள்ளதால் தற்போது அழகிரி மீண்டும் தீவிர அரசியலுக்குள் வர நினைத்துள்ளார். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வந்தன. பாஜகவில் இணையும் தகவலை அவர் மறுத்துவிட்டார்.


இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, நான் திமுகவில் இணையப்போவதாக வருவதெல்லாம் தவறான செய்தி. வதந்திகள் இங்கு நிறைய உலா வருகிறது. ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே எந்த முடிவையும் எடுப்பேன். புதிய கட்சி ஆரம்பிப்பது பற்றி போகக் போக உங்களுக்குத் தெரியும். வரும் சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கு கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.


திமுகவில் தயாநிதி அழகிரிக்கு பதவி வழங்கப்படவுள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் அமித் ஷாவை சென்று சந்திப்பதாக கூட பேச்சு அடிபட்டது. அப்படியான சந்திப்பு ஏதும் நிகழ்ந்ததா? வதந்திகளை மட்டுமே என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள் என்று பதிலளித்தார்.

புதிய கட்சியை அழகிரி துவங்கினால் அது திமுகவைத்தான் பாதிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. ஆகவே, அழகிரி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

Exit mobile version