“என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது” என நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96–வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. மீனவரணி சார்பில் சென்னை மெரினா நடுக்குப்பம் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.
வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்புக்கு ஒன்றுமே தெரியாது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு :
‘கமல்ஹாசன் எனது நல்ல நண்பர். அவருக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. ‘அரசியல் களத்தில் நெருங்கிய நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை’, என்று எனது அரசியல் ஆசான் கருணாநிதி எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு தி.மு.க.வுக்கு எதிராகவே நான் பேசுகிறேன். ஏனெனில் கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் இல்லை. இப்போதுள்ள தி.மு.க.வுக்கு, கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
கமல்ஹாசன் எனது நண்பர். என்னை திட்டலாம், என்னை அணைத்து கொள்ளலாம், என்னை பற்றி எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். கமல்ஹாசனுக்கு அந்த உரிமை இருக்கிறது. என நடிகை குஷ்பு பதிலளித்தார்.