கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏ செங்குட்டுவனின் வீடியோ சர்ச்சையை கிளப்பி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வாட்ஸாப்ப் குரூப்களில் வீடியோ ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது. அதில் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ செங்குட்டுவன் கடும் கோபத்துடன் இருப்பதாக காணப்படுகிறது. மேலும் அவர் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி திட்டுவது, ஜாதியை குறிப்பிட்டு கடுமையாக திட்டுவது போன்றும் பதிவாகியுள்ளது. மேலும் அதில் மீசையை முறுக்குகிறாயா? நான் சொல்வதை கேட்காவிட்டால் உன்னை தூக்கில் ஏற்றிவிடுவேன் என்றும் கூறுகிறார்.
இந்த விடியோவானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ செங்குட்டுவன் நிலபேரம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது அதில் ஒரு தரப்பினரை தான் செங்குட்டுவன் கடுமையாக திட்டுகிறார் என்று தெரிகிறது. மேலும் செங்குட்டுவன் இதே போல கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பதாக திமுகவின் இடையே ஒரு முணுமுணுப்பு காணப்பட்டுள்ளது. இதை திமுகவினரே பதிவேற்றம் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதனை தொடர்ந்து செங்குட்டுவன் இதை பற்றி கூறுகையில் ஒரு ரியல் எஸ்டேட் நிர்வாகி ஒரு நிலத்திற்கான 10 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு அதனை வேறு ஒருவர் பேரில் விற்ற தகராறு தன்னை தேடி வந்தது என்றும் தனக்கும் அந்த வீடியோவில் குறிப்பிடப்படும் நிலத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.