விலைவாசி உயர்வு: சட்டப்பேரவையில் உதயநிதி, இபிஎஸ் சரமாரி கேள்வி!

“மளிகைக் கடை பக்கமே போக முடியவில்லை” – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு; 41 பொருள்களின் விலையை தினமும் கண்காணிப்பதாக அமைச்சர் வெங்கடரமணன் பதில்

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விலைவாசி உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசினர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரையிலும், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.24 வரையிலும் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். வறட்சி மற்றும் ஆந்திரத்தில் இருந்து வரும் அரிசியின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட காரணிகளும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 41 அத்தியாவசியப் பொருள்களின் விலையை அரசு நாள்தோறும் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

விலை கண்காணிப்புக் குழு வாரந்தோறும் கூடி, எந்தெந்த பொருள்களின் விலை அதிகரித்துள்ளது, பண்டிகைக் கால தேவை, விளைச்சல் குறைவு மற்றும் சர்வதேச சூழல் உள்ளிட்ட காரணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

Exit mobile version