நீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி கர்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் சி.எஸ். கர்ணன் 2017ஆம் ஆண்டுகொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதித்து பேசியதாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதன்பேரில் கைது செய்யப்பட்ட கர்ணன், 6 மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையானார். அதன்பிறகு ஊழலுக்கு எதிரான கட்சி என்று ஒன்றையும் ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்.
இதனிடையே சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து இழிவாகப் பேசி ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், புகார் தொடர்பாக கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தேவிகா, பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும் இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல் துறை விளக்கம் அளித்தது. கர்ணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபற்றி டிஜிபி, சென்னை கமிஷனர் வரும் 7ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை சென்னை ஆவடி அருகேயுள்ள அவரது வீட்டில் வைத்து மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது 159 (கலவரத்தை துாண்டுதல்), 509 (பெண்களை அவமதித்தல்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.