பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சவுகார்பேட்டையில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மகன் என 3 பேரையும் மர்மநபர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
அவர்கள் 3 பேருமே நெற்றியில் குண்டு துளைத்து இறந்துள்ளனர். அவர்களைக் கொன்ற மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடூர செயலுக்கு மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் 2 ட்வீட்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “தமிழகத்தின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்” என்று கமல் பதிவு செய்துள்ளார். இந்த 2 ட்வீட்கள் ட்விட்டரில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. ஏராளமானோர் அந்த ட்வீட்களை ரிட்வீட் செய்து வருகின்றனர்.