உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர்தான்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமணி மேகாலயாவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதால், அதிருப்தியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வா் பிரதாப் சாஹி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். ஒரு வருடம் வரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய நிலையில், வரும் 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.


இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க உச்ச நீதிமன்ற முக்கிய நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சஞ்ஜீப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

read more: அப்போது ஏன் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தவில்லை: கமலுக்கு ஜெயக்குமார் கேள்வி!


கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இளநிலை பொருளாதாரம் மற்றும் சட்டப் படிப்பை முடித்த சஞ்ஜீப் பானர்ஜி, 1990ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பல மாநிலங்களில் முக்கிய வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version