கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருடன் ஆலோசனை
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:-
பி.சி.ஆர். பரிசோதனை
கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று வரை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இன்னுயிர் இழந்துள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனைக்கான விலை அதிகமாக உள்ளதுடன் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, பரிசோதனை எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, பரிசோதனைச் செலவை மிகவும் குறைப்பதுடன் மாநிலங்களுக்கு நிதி உதவியும் அளிக்க வேண்டும்.
தடுப்பூசி ஆயத்த பணிகள்
தடுப்பூசி பயன்பாடு விரைவில் வர இருக்கும் நிலையில், நாம் எவ்வித தாமதத்துக்கும் இடம் தராமல், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும், அதற்கான ஆயத்தங்கள் திட்டமிட வேண்டும். உலக அளவில் பல்வேறு நாடுகளில் 161 தடுப்பூசி வகைகள் தயாரிப்பு வெவ்வேறு நிலைகளில் உள்ளன. 55 தடுப்பூசி வகைகள் மனிதர்கள் மேல் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு தடுப்பூசி மருந்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை.
விலை
புனே சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கி உள்ள கரோனா தொற்று தடுப்பூசி அரசுக்கு மூன்று டாலர் விலைக்கும், தனியார் நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இம்மருந்து இரண்டு முதல் எட்டு டிகிரி அளவில் சேமித்து வைக்கப்பட முடியும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் சரியாக இருக்குமானால் இந்தியத் தயாரிப்பான இந்தத் தடுப்பூசி நமது நாட்டின் சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். 1600 மில்லியன் ஊசிமருந்து அளவுக்கு மக்களுக்கு, அதுவும் ஒருவருக்கு ஒரு டோஸ் ஊசி தந்திட மத்திய அரசு உத்தேசித்து இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் இந்த அளவுக்கு உடனடியாக உற்பத்தி செய்து தர முடியுமா என்று தெரியவில்லை.
அரசு ஏற்க வேண்டும்
எனவே, இந்தியாவிலும் குறைந்தபட்சம் 3 டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும். நமது மக்கள் தொகை 130 கோடி என்று கணக்கில் கொண்டு பார்த்தால் ஊசி விலை சராசரி ரூபாய் ஆயிரம் என்று வைத்து மதிப்பீடு செய்தாலும், மொத்த செலவு 3,90,000 கோடி வரை ஆகும். எனவே, இப்போதைக்கு ஆளுக்கு இரண்டு டோஸ் என எடுத்துக் கொண்டால் அரசுக்கு ஆகும் செலவு ரூபாய் 2,60,000 கோடி அளவில் இருக்கும்.
இந்தத் தொகையை மத்திய – மாநில அரசுகளுடன் இவற்றின் பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய நிறுவன சமுதாயப் பொறுப்பு நிதியை 2021-2022ஆம் ஆண்டுகளில் முற்றிலும் தடுப்பூசி மருந்துக்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
ஒதுக்கீடு
தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்துப் போகக்கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு. எனவே, அரசு தேவைப்பட்டால், ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கொரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம்.
இன்று நாம் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டியது மாவட்ட, வட்டத் தலைநகர்களில் கரோனா தொற்று தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்லவும், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு வசதிகளைத் தயார் நிலையில் வைப்பதுதான். இவ்வாறு அவர் பேசினார்.