அமைச்சர் உதயநிதி நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும்: இளையராஜா வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். அதனைத்தொடர்ந்து தொகுதியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பல அமைச்சர்களும், கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்த ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து அவர் தனது முதல் கையெழுத்தை போட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே! நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பதற்கு ஏற்ப, நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது உங்கள் தாயாருக்கு தான் அளவற்ற மகிழ்ச்சியை தரும். நீங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஏற்கனவே களமிறங்கிவிட்டீர்கள். அரசியலுக்கும் வந்துவிட்டீர்கள்.

அமைச்சரான பின்னர் பொறுப்புகள் அதிகரிக்கும். எனவே நீங்கள் இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதனை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version