அமெரிக்க தேர்தல்: வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. மோடிக்கான படிப்பினை – திருமா


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருப்பது, மோடிக்கு படிப்பினை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, எம்.பியும்., வி.சி.க. தலைவருமான திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-
மோடிக்கு படிப்பினை
ஜோ பைடனின் வெற்றி, வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதையும் இந்தியாவில் ட்ரம்ப்பை ஆதரித்த மோடிக்கு இதுவொரு படிப்பினை என்பதையும் உறுதிப்படுத்துகிறது. உலகில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை மென்மேலும் பல்கிப் பெருக இவரின் வெற்றி உறுதுணையாக இருக்கும். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க இருக்கிறார். இது ஜனநாயகத்தின் மீது அமெரிக்கவாழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

வெறுப்பு அரசியல்
ட்ரம்ப்பின் மிக மோசமான வெறுப்பு அரசியலால் கறுப்பின வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ஜோ பைடனுக்கு வாக்களித்துள்ளனர். அத்துடன், அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பைடனுக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
ஜனநாயகத்தை மதிக்கும் பைடன் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பது, உலக அளவில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்ரிக்க – அமெரிக்கர்கள் இனி உயிர் அச்சம் இல்லாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் பைடனின் வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.

கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்பது தமிழர்களுக்குப் பெருமையளிக்கிறது. அவர் பதவி வகிக்கும் காலத்தில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைப்பதற்கு அவர் தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும், என திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version