சூரியனை போன்ற பல கிரகங்களை கொண்ட ஒரு நட்சததிரத்தின் முதல் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தை போல் அல்லாமல் இவை இரண்டு பெரிய வாயுக்களால் நிறைந்த கிரகங்களை கொண்டுள்ளது.
TYC 8998-760-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் இரண்டு கிரகங்களுடன் சேர்த்து முதல் முறையாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக வானியலாளர்கள் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களை நேரடியாக படம்பிடித்துள்ளனர். TYC 8998-760-1 நட்சத்திரத்திற்கு மேலே உள்ள பிரகாசமான புள்ளிகள் பின்னணியில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் ஆகும்.
சிலியில் உள்ள Very Large Telescope எனும் தொலைநோக்கி உதவியால் இந்த நட்சத்திர குடும்பத்தை படம் பிடித்துள்ளனர்.இளம் நட்சத்திரமான இதனை இரண்டு மாபெரும் கிரகங்கள் சுற்றி வருகின்றன. TYC 8998-760-1 நட்சத்திரம் மஸ்கா விண்மீன் தொகுப்பில் சுமார் 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. வெறும் 17 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த குடும்பம் , 4 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரிய மண்டலத்துடன் ஒப்பிடும்போது இளம் குடும்பம் தான்.
வானியலாளர்கள் ஆயிரக்கணக்கான வெளி கிரகங்களைக் கண்டறிந்தாலும், பெரும்பாலானவை நேரடியாகக் கவனிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அவற்றின் நிழல் தங்கள் நட்சத்திரங்களுக்கு முன்னால் கடக்கும் போது அடையாளம் காணப்பட்டவை
சில நட்சத்திரங்கள் மட்டுமே இப்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அதில் இரண்டு நட்சத்திரங்களில் மட்டும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உள்ளன. இரண்டுமே சூரியனைப் போன்றதல்ல .ஒன்று சூரியனை விட மிகப்பெரியது, மற்றொன்று சூரியனை விட மிகச் சிறியது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இளம் நட்சத்திரம் தான் சூரியனின் அளவுக்கு நிகராக உள்ளது. இதை வைத்து ஆரம்ப காலங்களில் சூரியன் மற்றும் அதன் கிரகங்கள் எப்படி செயல்பட்டன, உருவாகின போன்றவற்றை அறிய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.