சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : தோனி ஓப்பனிங்கில் களமிறங்குறாரா…?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

மும்பையில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் கோதாவில் குதிக்கிறது. டெல்லிக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் சென்னை நிர்ணயித்த 189 ரன் இலக்கை டெல்லி தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அரைசதம் விளாசி எளிதில் எடுக்க வைத்து விட்டனர். சென்னையின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு பெயர் போன தீபக் சாஹர் அத்தகைய பந்துவீச்சை மறந்துவிட்டது போல் பந்து வீசினார். அத்துடன் தொடக்கத்தில் பவுன்சர்களை வீசி நெருக்கடி கொடுக்கவும் சென்னை பவுலர்கள் தவறினர்.

ஒரே ஆறுதல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்ததுதான். கேப்டன் டோனி ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றினார். வலுவான பஞ்சாப்புக்கு எதிராக அதுவும் வான்கடேவில் சாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது 200 ரன்கள் அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து தெறிக்கவிட்டால் வெற்றிக்கணக்கை தொடங்கலாம். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தாமதமாக வந்து இன்னும் 7 நாள் தனிமைப்படுத்துதலை முடிக்காததால் இன்றைய ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் பந்துவீச்சில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 4 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 221 ரன் குவித்த போதிலும் வெற்றிக்காக கடைசி பந்து வரை போராட வேண்டி இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (91 ரன்), தீபக் ஹூடா( 64 ரன்), கிறிஸ் கெய்ல்(40 ரன்) அசத்தினர். பேட்டிங்கில் வலிமையான பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்திலும் ரன்வேட்டைக்கு தீவிரமாக உள்ளது. பஞ்சாப்பின் அதிரடிக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். தோனி தற்போது 7-வது டவுனில் விளையாடி வருகிறார். ஆனால் அவர் இன்னமும் முன்னால் வந்து அணியை வழிநடத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version