ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றனர்.
மும்பைக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தியதும், மேக்ஸ்வெல் (39 ரன்), டிவில்லியர்சின் (48 ரன்) ரன் பங்களிப்பும் பெங்களூருவுக்கு வெற்றியை தேடித்தந்தது. கடந்த ஆண்டு கலக்கிய தேவ்தத் படிக்கல் கொரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு அணியுடன் இணைந்து விட்டார். களம் காண ஆர்வமுடன் இருப்பதாக கூறினாலும் முதலாவது ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இதே மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் தவிர மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர்.
பேட்டிங்கில் ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே அரைசதம் அடித்தும் பலன் இல்லை. கேப்டன் டேவிட் வார்னர் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சரிவில் இருந்து மீள்வதற்கு வார்னரின் பேட் சுழன்றடிக்க வேண்டியது அவசியமாகும். நிலைத்து நின்று ஆடக்கூடிய கேன் வில்லியம்சனுக்கு தொடக்க ஆட்டத்தில் இடம் கிடைக்க வில்லை. இன்றைய மோதலில் அவர் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.