கொல்கத்தாஅணி போராடி தோல்வி..புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில், 18 ரன்கள் வித்தியாத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பிருத்வி ஷாவின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், டெல்லி அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் தினறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நரைன் 3 ரன்களில் வெளியேற, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 28 ரன்களுடன் நடையை கட்டி அதிர்ச்சி அளித்தார்.

விக்கெட் சரிவிற்கு மத்தியிலும், மறுபுறம் நிலைத்து ஆடிய ராணா சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி வந்தார். பெரிய இலக்கு என்பதால் சற்று முன்கூட்டியே களமிறங்கிய ரசல், வெறும் 13 ரன்களை மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனிடையே, அரைசதத்தை நிறைவு செய்த ராணா, 58 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் படேல் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடரின் தொடக்கத்தில் இருந்தே மோசமான பார்மில் உள்ள கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், வெறும் 6 ரன்களுக்கும், பாட் கம்மின்ஸ் 5 ரன்களுக்கும் வந்த வேகத்தில் நடையை கட்ட அந்த அணி 122 ரன்களை சேர்ப்பதற்காக 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இயன் மார்க்கன் – திரிபாதி இணை, டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சிக்சர்கள், பவுண்டரிகள் என அடுத்தடுத்து பந்து எல்லைக்கோட்டை தொட, மைதானத்தில் ரன் மழை பொழிந்தது.

18 பந்துகளில் 5 சிகசர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்த மார்க்கன் நோர்ட்ஜே பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்திருந்த திரிபாதி ஸ்டோய்னிஷ் பந்துவீச்சில் போல்டானார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Exit mobile version