ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

இந்திய விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பாத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இந்த விருதைப் பெறவுள்ள வினேஷ் போகாட் 2018-ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார். டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிக்கா பாத்ரா 2018-ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கத்தையும், ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்றவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா, கேல் ரத்னா விருது பெறப்போகும் நான்காவது கிரிக்கெட் வீரராவார். 1998-ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர், 2007-ஆம் ஆண்டில் எம்.எஸ்.தோனி, 2018-ஆம் ஆண்டில் விராட் கோலி ஆகியோருக்கு பிறகு ரோஹித் சர்மா இந்த விருதைப் பெறுகிறார்.
சிறந்த வீரர்களுக்கு விருது வழங்குவது தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான இந்தக் குழுவில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், சர்தார் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில், வரும் 29-ஆம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சி, காணொளி வாயிலாக நடைபெறும் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேப்போல், துரோனாச்சார்யா விருதுக்கு வில்வித்தை வீரர் தர்மேந்திர திவாரி, தடகள வீராங்கனை புருஷோத்தம் ராய், குத்துச்சண்டை வீரர் சிவ்சிங், ஹாக்கி வீரர் ரோமேஷ் பதானியா, கபடி வீரர் கிருஷண் குமார் ஹூடா, பாரா பவர் லிஃப்ட் வீரர் விஜய் பாலசந்திர முனிஷவர், டென்னிஸ் வீரர் நரேஷ் குமார், மல்யுத்த வீரர் ஓம் பர்காஷ் தாஹியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
அர்ஜுனா விருதுக்கு 27 பேரும், தியான் சந்த் விருதுக்கு 15 பேர் உள்பட மேலும் நான்கு பிரிவுகளுக்கு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.