வாட்சன் மற்றும் ராயுடுவின் சிறப்பான பாட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணிக்கு 168ரன்கள் இலக்காக வழங்கியது சென்னை அணி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து சென்னை அணி சார்பில் தொடக்க வீரர்களாக இளம் வீரர் சாம் கர்ர்ன் மற்றும் டு பிளிசி களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே சாம் கர்ர்ன் அதிரடியை வெளிப்படுத்த,மறுமுனையில் டு பிளிசி ரன் எதுவுமின்றி வெளியேறினார்.
அடித்து ஆடிய சாம் கர்ர்ன்(31 ரன்கள்,21 பந்துகள்) சந்தீப் சர்மா பந்தில் கிளீன் போல்ட் ஆக,அதன் பிறகு வாட்சன் மற்றும் ராயுடு நிலைத்து நின்று அடிக்க 13.4 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்தது.ரசித் கான் வீசிய 15 வது ஓவரில் வாட்சன் அட்டகாசமாய் ஒரு சிக்ஸர் பறக்கவிட,ராயுடுவும் அதே ஓவரில் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டார்.கலீல் அகமத் வீசிய அடுத்த ஓவரில் ராயுடு(41 ரன்கள்,34 பந்துகள்) தூக்கி அடிக்க பார்த்து வார்னரிடம் கேட்ச் ஆனார்.அடுத்து அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாட்சன்(42 ரன்கள்,38 பந்துகள்) நடராஜன் பந்தில் மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் ஆக,அந்த ஓவரில் கேப்டன் தோனி 2 பௌண்டரிகளை ஓட விட்டார்.
17 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்க,மறுமுனையில் புதிதாக களம் இறங்கிய ஜடேஜா ஒரு பௌண்டரி சந்தீப் பந்தில் அடித்தார்.அடுத்து நடராஜன் பந்தில் கேப்டன் தோனி(21 ரன்கள்,13பந்துகள்) 102 மீட்டர் ஒரு சிக்ஸரை பறக்க விட்டு,அடுத்த பந்தே வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,19 ஓவர் முடிவில் சென்னை 150 ரன்களை கடந்து இருந்தது.மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த பிராவோ கலீல் பந்தில் டக் அவுட் ஆனார்.அதே ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி கடைசி ஓவரில் நொறுக்க, 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 168 ரன்கள் இலக்காக வழங்கியது.
சென்னை அணி சார்பில் ஜடேஜா 25 ரன்களுடனும், தீபக் சகார் 2 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.