அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் இன்று தொடங்கவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றுக் காரணமாக, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வருட அமெரிக்க ஓபன் போட்டி, நியூயார்க் நகரில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டியில், ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. எனவே, போட்டியானது காலி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
மேலும், இந்தப் போட்டியில் விளையாடுபவர்களுக்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல், விடுதி மற்றும் ஸ்டேடியம் தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது. விளையாடும் போதும், சாப்பிடும் போதும் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் அனுமதியின்றி வெளியே சென்றால், போட்டியை விட்டே நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட, பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வருட போட்டிக்கான பரிசுத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பிரபல நெ.2 வீரர் நடாலும், உலகின் நெ.1 வீராங்கனை ஆஷ்லி பார்டியும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள அனைத்து போட்டிகளிலும் இருந்து விலகுவதாக, பிரபல வீரர் ரோஜர் ஃபெடரரும் அறிவித்துள்ளதால், இந்த ஆண்டு ஆடவர் பிரிவில் ஜோகோவிச் கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு யு.எஸ். ஓபன் போட்டியில், தனது 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன், செர்பிய வீரர் ஜோகோவிச்சும், தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் களத்தில் இறங்க உள்ளார்கள்.
இந்த வருடப் போட்டியிலுருந்து பிரபல வீரர்கள் பலர் விலகியுள்ளதால், போட்டியின் முதல் சுற்றுக்கு, இந்திய வீரர் சுமித் நாகல், நேரடியாகத் தகுதிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு, இந்தப் போட்டிகள் தொடங்கும்.