அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்ஐஆர் – இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் 38 ஆய்வகங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 4,600 விஞ்ஞானிகள், 8 ஆயிரம் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். விண்வெளி, கட்டமைப்பு, கடல் அறிவியல், உயிர் அறிவியல், உலோகம், ரசாயனங்கள், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் இயக்குநராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார்.இந்த நிலையில் சிஎஸ்ஐஆர்-ன் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஆராய்ச்சி துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கலைச்செல்வி மின்வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். இவர் 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் 6 காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கலைச்செல்வி தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் பயின்றவர்.தற்போது காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.
