தஞ்சாவூரில் ‘தமிழ்நாடு’ எழுத்து வடிவில் அமைந்த தமிழ் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ‘தமிழ்ப் பல்கலைக்கழக’மும் ஒன்று. தஞ்சாவூர்- திருச்சி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம், தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாடு ஆகியவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.

1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், கலைப்புலம், அறிவியல்புலம், மொழிப் புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்புலம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த ஐந்து பிரிவுகளுக்கும், ஐந்து கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அந்த ஐந்து கட்டிடங்களும் ‘தமிழ்நாடு’ என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ‘த, மி, ழ், நா, டு’ என ஒவ்வொரு எழுத்துக்களின் வடிவமைப்பில் ஒவ்வொரு கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. ‘த’ வடிவ கட்டிடத்தில் கலைப்புலம் துறைகளும், ‘மி’ வடிவ கட்டிடத்தில் அறிவியல்புலம் துறைகளும், ‘ழ்’ வடிவ கட்டிடத்தில் மொழிப்புலம் துறைகளும், ‘நா’ வடிவ கட்டிடத்தில் சுவடிப்புலம் துறைகளும், ‘டு’ வடிவ கட்டிடத்தில் வளர்தமிர்புலம் துறைகளும் செயல்படுகின்றன.

பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புதிய உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் போன்றவை, ‘கலைப்புலம்’ பிரிவின் அடிப்படை நோக்கம். இதன் கீழ், சிற்பத்துறை, இசைத் துறை, நாடகத்துறை ஆகிய மூன்று துறைகள் செயல்படுகின்றன. ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துச் சுவடிகள், கல்வெட்டுச் சான்று போன்றவற்றை தேடிக் கண்டுபிடித்து,

அவற்றை தொகுத்து பாதுகாத்தல் மற்றும் களஆய்வு செய்தல் ‘சுவடிப்புலம்’ பிரிவின் அடிப்படை நோக்கம். இதன் கீழ் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களின் தேவையை நிறைவுசெய்வதையும், பலதுறை சார்புடைய ஆய்வு அமைய வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது ‘வளர்தமிழ்ப்புலம்’ என்ற பிரிவு.

இதில் அயல்நாட்டு தமிழ்கல்வித் துறை, மொழி பெயர்ப்புத் துைற, அகராதியியல் துறை, சமூக அறிவியல் துறை, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறைகள் செயல்படுகின்றன. இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கிய படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது ‘மொழிப்புலம்’ பிரிவு.

இதில் இலக்கியத்துைற, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், நாட்டுப்புறவியல் துறை, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்புள்ளி ஆகிய துறைகள் செயல்படு கின்றன. பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபு செல்வங்களைத் தேடித் தொகுத்து ஆய்வு செய்தல் மற்றும், அதனை நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கொண்டு பயன் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டது, ‘அறிவியல்புலம்’ பிரிவு.

இதன் கீழ், சித்த மருத்துவத்துறை, தொல்லறிவியல் துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, கட்டிடக் கலைத் துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

Exit mobile version