இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இந்திய பிரபலங்களே?

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக, பாப் பாடகி ரிஹானா, சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட உலக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரவிசாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், “எங்கள் நாட்டு பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் தலையிட வேண்டாம் ” என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மற்ற நாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவிக்கட்டும், நாம் எதிர்ப்போம் என்று காத்துக் கொண்டிருந்தனர் போல.

இங்கே அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பிரச்சனையில்லை; ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கின்றது. ஆனால், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம், எங்கள் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என தெரிவிக்கும் இவர்கள், கடந்த 70 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இல்லை குடியரசு தினத்தன்று வன்முறை வெடித்த போது, என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அப்போது எல்லாம் இல்லாமல் மற்ற நாட்டினர் ஆதரவு தெரிவித்ததும் ஒன்றாக எதிர்ப்பது எவ்விதத்தில் நியாயம். ஆக எதிர்ப்பு தெரிவிப்பதில் மட்டும் தான் ஒற்றுமையா?

மேலும், கிரேட்டா தன்பெர்க் தெரிவித்த ஆதரவு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அவர் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், “டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல தீவிரவாதிகள்” என்று தெரிவித்த கங்கனா ரனாவத் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொல்லப்பட்ட போது, இந்தியா கண்டனம் தெரிவித்தது” என்று கூறியுள்ளது முக்கியமானது. அப்போது, மனிதாபிமானம் இல்லாத செயலுக்காகத் தான் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல இப்போது, உலக பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பதும் மனிதாபிமான அடிப்படையில் தான்.

எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும், அறவழியில் போராடி வரும் விவசாயிகளை மதித்து, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்தக் குரலாக உள்ளன.

Exit mobile version