சேலத்திலிருந்து ஆஸ்திரேலியா வரை- நடராஜன்

ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி தங்கள் திறமையை வெளிப்படுத்திய பல வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட பும்ராவும் இந்திய அணியில்  இடம்பிடித்து, தற்போது தன் யார்க்கர் பந்துகளால் எதிரிகளை திணறடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருட ஐ.பி.எல் மூலம் கண்டெடுக்கப்பட்ட முத்து நடராஜன்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் மூலம் தான் இவரது திறமை வெளிஉலகிற்கு தெரிந்தது. பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவக், நடராஜனின் பந்து வீசும் திறமையைப் பார்த்து அவரை ஏலத்தில் எடுத்தார். ஆனால், முழங்கை காயத்தால் பஞ்சாப் அணிக்காக ஒரு போட்டிக்கு மேல் அவரால் விளையாட முடியாமல் போனது. 2020 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் நடராஜன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் துல்லிய யார்க்கர் மூலம் அணியின் வெற்றிக்கு உதவினார். ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாவிட்டாலும் நடராஜன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் நெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு  காயம் ஏற்பட, அவருக்கு பதிலாக அதிகாரபூர்வமாக இந்திய அணிக்காக T20 தொடரில் விளையாடினார்.  அறிமுகமான முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி. சாம்பியன் கோப்பையை வாங்கிய கேப்டன் விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியாவும் கோப்பையை, இது உனக்கு தான் பொருத்தமானது என்று நடராஜனின் கைகளில் கொடுத்து பெருமைபடுத்தினர். 

தற்போது, உமேஷ் யாதவுக்கு பதிலாக டெஸ்ட் போட்டியிலும் நடராஜன் விளையாடி வருகிறார். 5 நாட்கள் தொட்ந்து நடைபெறும் டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்படாமல் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் தொடங்கிய இவரது வாழ்க்கை பயணம் ஆஸ்திரேலியாவில் பயணித்து வருகிறது.

நம் தமிழ்நாட்டு வீரர் என்பது கூடுதல் சிறப்பு நடராஜனுக்கு. விக்கெட் எடுத்து சாதித்தாலும் முகத்தில் மாறாத மெல்லிய புன்னகையுடன் வலம் வருகிறார் நடராஜன்.

Exit mobile version