மகாபாரத கதை என்பது பாண்டவர்களையும், கௌரவர்களையும் சூழ்ந்தது. இதனாலே மக்களுக்கு இந்த கேரக்டர்களை தவிர மற்ற கதாபாத்திரங்களை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
யார் இந்த அரவான்?
அரவான் மகாபாரத்தில் ஒரு மிக சிறிய கதாபாத்திரம் என்றாலும் , அவர் செய்த மிகப்பெரிய தியாகத்தினால் இன்றும் கூத்தாண்டவராக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார் . இவர் வழி வந்ததே திருநங்கைகள் என்னும் மூன்றாம் பாலினம் என்று நம்பப்படுகிறது.இதனாலேயே திருநங்கைகள் அரவாணிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
அரவான் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மற்றும் நாக தேவதை உலுப்பிக்கு மகனாக பிறந்தவர். தன் தந்தையை போலவே போரில் சிறந்து விளங்கினார் அரவான். அரவான் குருஷேத்திர போரில் போரிட்டு வீர மரணம் அடைந்தார். இந்த போரில் வெற்றியடைய அரவான் செய்த தியாகத்தினால் வரலாறில் இடம் பிடித்தார்.
களப்பலி:
அந்நாளில் போரில் வெற்றியடைய களப்பலி ஒன்று கொடுக்கப்படும். அதன்படி அந்த போர்படையை சேர்ந்த சிறந்த வீரன் ஒருவன் பலியிடப்படுவான். இந்த களப்பலி இடுபவர்களே போரில் வெற்றியடைவார்கள் என நம்பப்படுகிறது. குருஷேத்திர போரில் வெற்றியடைய தன்னை களப்பலியிட அரவான் முன் வந்தார்.
அரவானுக்கு கொடுக்கப்பட்ட மூன்று வரங்கள்:
களப்பலிக்கு முன்னர் அரவான் கிருஷ்ணரிடம் மூன்று வரங்கள் கேட்டதாக கூறப்படுகின்றது. கிருஷ்ணர் கொடுத்த முதல் வரம் அரவான் போரில் வீரமரணம் அடையவேண்டும், இரண்டாம் வரமாக அரவான் 18ம் நாள் போரினைக் காண வேண்டும் என்பது. அரவானுக்கு கொடுக்கப்பட்ட மூன்றாவது வரம் வாய்வழி சொல்லாக சொல்லப்படும் ஒன்று.
திருநங்கைகள் கூத்தாண்டவராக கொண்டாடப்படும் அரவான்:
அரவானுக்கு கொடுக்கப்பட்ட மூன்றாவது வரம், பலியிடுவதற்கு முன்பு அரவானுக்கு திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் இறப்பிற்கு பின்பு ஈமச்சடங்குகளை செய்ய யாரவது ஒருவர் உரிமை கோர வேண்டும் என்பதற்காகவே. ஆனால் திருமணம் முடிந்த மறுநாளே இறக்க போகும் ஒருவனை மணந்து விதவையாக எந்த ஒரு பெண்ணும் முன்வரவில்லை. எனவே கிருஷ்ணர் மோகினி வேடம் அணிந்து அரவானை திருமணம் செய்து கொண்டு இரவு முழுவதும் அரவானுடன் கழித்தார். மறுநாள் அரவான் பலியிட்டு பிறகு கிருஷ்ணர் தன் தாலியை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு மீண்டும் தன் கோலம் ஏற்று போர்க்களம் சென்றதாக கூறப்படுகின்றது. இந்த நிகழ்வினையே திருநங்கைகள் கூவாகம் திருவிழாவின் இறுதி நாளாக கொண்டாடுகின்றனர்.
கூத்தாண்டவர் திருவிழா:
அரவான் மரபு வழியில் கூத்தாண்டவராக கொண்டாடப்படுகிறார். திரௌபதி வழிபாட்டிலும் கூத்தாண்டவருக்கு முக்கிய பங்குண்டு. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா கொண்டாடப்படுகின்றது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து திருநங்கைகள் இந்த திருவிழாவிற்காக ஒன்று கூடுகின்றனர். அரவானின் ஒரு நாள் இல்லறத்தை தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு கோவில் பூசாரியின் கைகளால் தாலி கட்டி கொள்கின்றனர். மறுநாள் அரவானின் களப்பலி தியாகத்தை நினைவு கூறும் விதமாக திருநங்கைகள் வெள்ளை சேலைக் கட்டி தங்கள் தாலிகளை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து திருவிழாவினை முடிக்கின்றனர்.
குழந்தைப்பேறு வரமளிக்கும் அரவான்:
அரவானை தரிசிப்பதால் தீராத நோய்கள் தீரும் எனவும், உறுமைசோறு எனப்படும் படையலில் உள்ள பலகாரங்களையும் உணவுகளையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.