இன்றைய இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒரு பிரச்னை, பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனப்படும் ஹார்மோன் குறைபாடு. இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாயே ஏற்படாத சூழல் போன்றவையெல்லாம் இருக்கலாம்.
இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு கருப்பையில் பல நீர்க்கட்டிகள் காணப்படுகிறது. இது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் ஏற்படுகிறது.
பொதுவாக, இந்த ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதன் அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படும். உதாரணத்துக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்களுக்கு, அதைச் சரிசெய்வதற்கான சிகிச்சை; கர்ப்பமாவதில் சிக்கல் நீடித்தால் அதற்கான சிகிச்சை; கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய் தெரியவந்தால், அதற்கான சிகிச்சை; வளரிளம் பருவத்தில், உடலில் முடி வளர்ச்சி தெரிந்தால், அதற்கான சிகிச்சை என அளிக்கப்படும்.
இந்தப் பிரச்னைக்கான முக்கியமான தீர்வை, இந்தக் கட்டுரையில் உங்களுக்குக் நாங்கள் சொல்கிறோம். `சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புள்ளவர்கள், மற்ற வாழ்வியல் மாற்றங்களைவிடவும், உணவு சார்ந்த மாற்றங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும்’ என்பது, மருத்துவர்கள் சொல்லும் விஷயம். அப்படியான சில உணவுப் பரிந்துரைகள் இங்கே…
தவிர்க்கவேண்டியவை…
- கலோரி மற்றும் சர்க்கரைச்சத்து குறைவான உணவுகள், நார்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம்வரை நார்ச்சத்து உட்கொள்வது நல்லது. தட்டில், பாதிக்குப் பாதி காய்கறிகளால் நிறைந்திருக்க வேண்டும்.
- சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி மற்றும் மைதா, பிராய்லர் சிக்கன், மட்டன் போன்ற கொழுப்புச்சத்து மிகுந்த கறி வகைகள், நெய், ரசாயனம் சேர்த்த நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள், கோதுமை, சோயா பருப்பு.
- அன்றாட உணவில், கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் கொண்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். பொதுவாக, இன்சுலின் அளவு அதிகரிப்பது உடல் கொழுப்பு மற்றும் எடையை அதிகரிக்க செய்யும். கார்போஹைட்ரேட்ஸ் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் என்பதால்தான், அவற்றை குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் அதிகம் உள்ள உணவுகளில் பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள், துரித உணவுகள், மஃபின்கள் அடங்கும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
தவிர்க்கக் கூடாதவை…
- ஒமேகா 3 அதிகமுள்ள ஆளி விதை, மீன், அவகேடோ பழம், எள், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை ஆகிய சிறுதானியங்கள், நாட்டுக்கோழி (கொழுப்பு அதிகமான தோல்பகுதியை நீக்கிவிட்டுச் சாப்பிடலாம்), முட்டையின் வெள்ளைக்கரு, நட்ஸ், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள குடமிளகாய், பூசணிக்காய், அடர் நிறமுள்ள பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்கள், காய்கறிகள், கீரைகள், சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதைப் போன்ற குளூகோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகள் (உதாரணத்துக்கு கைக்குத்தல் அரிசி. நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம்), தோலோடிருக்கும் பருப்பு மற்றும் பயறு வகைகள்.
- புரதம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரணம், அவை ரத்த சர்க்கரை அளவை சமநிலை வைக்க உதவுகிறது. மேலும், சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. எனவே பாலிசிஸ்டிக் ஓவரைன் உள்ள பெண்கள் புரத உணவுகளை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்காது. புரத உணவுகள் வயிற்று பசியை குறைக்கிறது, கலோரிகளை எரிக்க உதவுகிறது, பசி ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
- ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது, உணவுக்குப் பிறகு நீங்கள் முழுமையாகவும் திருப்தியுடனும் உணர உதவி செய்யும். இது ஒரு வகையில் எடை இழப்பு மற்றும் பிற அறிகுறிகளை சமாளிக்க உதவுகிறது. கொழுப்புகளில் கலோரிகள் நிறைந்துள்ளன. அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்கள் பசியை குறைக்க உதவும். ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு தேங்காய் வெண்ணெய், வெண்ணெய் மற்றும் பாதாம் வெண்ணெய் ஆகியவை அடங்கும்.
கட்டுரையாளர்: ஜெ. நிவேதா.