தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினருக்கும் (18வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவரும்) செப்டம்பர் 30 வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்துகிறது. இதில், முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் போட்டுக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக இந்த மாதத்தில் 2வது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 30க்குள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
