அரசு விரைவு பேருந்துகளில் இனி 50% கட்டண சலுகை

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. பொதுவாக திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன. இடங்கள் நிரம்பாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இடங்கள் நிரம்புகிறது. நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் பயண சலுகை திட்டம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். 5 முறை பயணம் செய்வதற்கு சலுகை கிடையாது. அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் பாதி கட்டணம் செலுத்தினால் போதும். இந்த சலுகையில் ஏசி பஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு பஸ்களுக்கும் பொருந்தும். தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் மே 1-ந் தேதி முதல் இத்திட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exit mobile version