சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி !!

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை ஐ.பி.எஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பலரும் சீருடையில் இருக்கும் படத்துடன் பயன்படுத்துகின்றனர். காவல் துறை பணிகள், பொது சேவை போன்றவற்றை புகைப்படங்களுடன் பதிவிடுகின்றனர்.

இந்த படங்களை வைத்தும் அந்த அதிகாரியின் முகநூல் பக்கத்தில் உள்ள சுய விவரங்களை வைத்தும் ஒரு போலி கணக்கை மோசடி கும்பல் தொடங்கும். அதன் பிறகு அந்த அதிகாரியின் நட்பு பட்டியலில் உள்ள நபர்களுடன் நட்பாகி விடுவர். தொடர்ந்து அவசரமாக பணம் தேவை என ஒரே நேரத்தில் அவர்களுக்குத் தகவல் அனுப்பி, பணம் கறப்பது வழக்கம்.

இந்த மோசடி கும்பல் ஏற்கனவே உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பெயரில் போலி முக நூல் கணக்கை தொடங்கி, மோசடி செய்து வந்துள்ளனர். அதன் அடுத்த கட்டமாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெயரிலும் போலி முகநூல் கணக்கை தொடங்கி அதிர்ச்சியளித்துள்ளனர். அந்தக் கணக்கை உடனடியாக முடக்கி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மோசடி நபர்களின் முகநூல் கணக்கு இயங்கும் சிக்னல், வங்கி கணக்கு மூலம் அவர்களை அடையாளம் கண்டு விசாரித்து வருவதாகக் கூறினார்.

சமூக வலைதள நட்புகளிடமிருந்து பணம் கேட்டு வரும் கோரிக்கைகளை அப்படியே நம்பிவிடாமல், சம்மந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

Exit mobile version