தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்திள்ளார்.

சென்னை :

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

‘தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, பிற துறைகளில் உதவியாளர்களாகப் பணியாற்றுபவர்களைப் பணி மாறுதல் அடிப்படையில் நியமிப்பதற்கான வயது வரம்பு பொருத்தமற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏராளமான பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.அவ்வாறு நியமிக்கப்படுவதற்கான வயது வரம்பு பட்டியலினம்/ பழங்குடியினருக்கு 35 வயதாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது நியாயமற்றது. தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு எவரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, அப்பணிக்கான தகுதிகள் மிகவும் கடினமானவை.

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கான அடிப்படைத் தகுதியே அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பணியில் இருக்க வேண்டும். அந்தப் பணியில் பட்டியலினத்தவர் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது வரையிலும், பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும் சேர முடியும்.அடிப்படைத் தகுதிக்கான பணியிலேயே ஒரு பிற்படுத்தப்பட்டவர்/மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 32 வயது வரை சேர முடியும் எனும்போது, அதைவிடக் கூடுதல் தகுதியும், கூடுதல் அனுபவமும் தேவைப்படும் பதவிக்குக் குறைவான வயது வரம்பை நிர்ணயிப்பது சரியல்ல. அவ்வாறு நிர்ணயிக்கப்படுவதால், 27 வயதுக்குப் பிறகு அமைச்சுப் பணி உதவியாளர் பணியில் சேருபவர்களுக்குத் தலைமைச் செயலக உதவியாளர் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது சமூக அநீதி.

Read more – ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

தமிழக அரசின் எந்த ஒரு பணியும் நியாயமற்ற காரணங்களைக் காட்டி, தமிழக குடிமக்களுக்கு மறுக்கப் படக் கூடாது. எனவே, தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு பணிமாறுதல் அடிப்படையிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்; அதன்மூலம் போட்டியைப் பரவலாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version