கோவை மாவட்டம்,போளுவம்பட்டி வனச்சரகத்தில், இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டு, எலும்பு கூடான நிலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள போளுவாம்பட்டி வனச்சரகம் ஏராளமான யானைகளிம் வசிப்பிடமாக உள்ளது. தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகம் ஜவ் காடு வனப்பகுதியில் போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, யானையின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் சென்று சோதனை நடத்தியதில், உயிரிழந்தது சுமார் 30 வயதுடைய ஆண் யானை என்பதும், உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த யானையின் உடலில் இருந்து தந்தம் வெட்டி எடுக்கப்பட்டுள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.