
பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்த செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேவுள்ள கிராமம் முள்ளம்பட்டி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்தப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான புகைப்படத்தில் பள்ளி சீருடையில் இருக்கும் இரண்டு குழந்தைகள், கழிவறையை துடைப்பத்தை வைத்து பெருக்கியும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் மீது குழந்தைகள் நல ஆர்வலர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளனர். மேலும் கழிவறை சுத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்த ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
