உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… டிசம்பர் 2-ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்…

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Fishing Boats

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 2-ஆம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக் கூடும்.

நவம்பர் 28 மற்றும் நவம்பர் 29 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நவம்பர் 30 அன்று தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

தென் தமிழகத்திற்கு கனமழை

டிசம்பர் 1 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நவம்பர் 29 அன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 30 அன்று தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 1 தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

கடலுக்குச் செல்ல வேண்டாம்

டிசம்பர் 2 அன்று தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாப் பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்டப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடல் பகுதிக்கு வரும் 2-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version