ஆக்கிரமிப்புகளுக்கு மின், குடிநீர் இணைப்பு கிடைத்தது எப்படி?

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புக் கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளித்த அரசு, ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட போதும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

(c)PragMatrix

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததில் இருந்து, ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுவதாக தோன்றுகிறது என தெரிவித்தது.

மேலும், வழக்கில் நீர்வளத்துறை செயலாளரையும், தாம்பரம் மாநகராட்சி ஆணையரையும், மின்சார வாரிய தலைவரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கியது எப்படி, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version