நீட் தேர்வு… தமிழகத்தில், இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13% குறைந்துள்ளது!!

செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில், கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13% குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 15, 97,433 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். இதுவே கடந்தாண்டு 15,19,375 லட்சம் மாணவர்கள் தான் நீட் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிகமாகும்.

ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை, இந்தாண்டு 1,17,990 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால், கடந்தாண்டு 1,34,714 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 13% சதவீதம் குறைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுபவர்களின் சதவீதம் குறைந்து வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுக்குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெறாமல் நீட் தேர்வில் வெற்றிப் பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய முடியாது என்பதால், ஏழை கிராமப்புற மாணவர்களும், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களும் நீட் தேர்வு எழுதாமல், தங்கள் கனவைத் தொலைத்து வருகின்றனர் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், நீட் தேர்வு முறை சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு ஏற்றவாறு இருப்பதால், தமிழகத்தில் மாநில தேர்வு முறையில் படிக்கும் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புறங்களில் படிக்கிற மாணவர்களும், இந்த தேர்வை எழுத அஞ்சுகின்றனர் என்று கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்ற விதிமுறையால், ஒரு முறை வெற்றிப் பெறாதவர்கள், வெற்றிப்பெரும் வரை தேர்வை எழுதுகின்றனர். இதன் காரணமாக, இதில் வெற்றி பெறும் மாணவர்களில் பலர் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரைக் காத்திருக்கும் சூழலில் நமது மாணவர்கள் இல்லை என்பதே உண்மை நிலை.

2019-ல் தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப்படிப்பில் சேர்ந்தவர்களில் 70% பேர் பழைய மாணவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதை வைத்து பார்த்தாலே, தமிழகத்தின் உண்மை நிலவரம் என்ன என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் தோல்வி மற்றும் பயத்தினால் நடக்கும் தற்கொலைகளும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்திருப்பதும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு, கனவாகவேப் போய் விடுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

Exit mobile version