ஓசூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலையை கடந்து யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்படுத்தியது. சானமாவு வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒற்றை காட்டு யானை ஒன்று தஞ்சமடைந்து கொண்டு இரவு நேரங்களில் வெளியேறி வனப் பகுதி அருகில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது, சில நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரப்பகுதியில் நின்று கொண்டிருக்கும். இந்நிலையில் ஒற்றையானை பேரண்டப்பள்ளி பகுதியில் நேற்றிரவு சாலையை கடக்கும் போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி யானை மீது மோதி விபத்து ஏற்படுத்தியது
விபத்தில் யானையின் இரண்டு பின் கால் பகுதியில் பலத்த அடிபட்டு சாலையில் விழுந்தது. உடனடியாக வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையை மீட்டு அயூர் அருகே உள்ள வனப்பகுதியில் வைத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். யானை தற்போது நலமுடன் இருந்தாலும் பின் கால்கள் இரண்டிற்கும் பலத்த அடி ஏற்பட்டதால் எழுந்து நிற்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகிறது, அதேசமயம் கவனக்குறைவாக ஓட்டிய லாரி டிரைவர் சோலைமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
