சென்னையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த 45 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலங்களில் சாமானிய மக்களை குறிவைத்து, ஒரு நம்பர் லாட்டரி, சூதாட்டம் போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதுண்டு.
இதனைத் தடுப்பதற்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக சென்னை குன்றத்தூரில் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 54ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், வடக்கு கடற்கரை, செங்குன்றம், வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைகளில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக மொத்தம் 32 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 45 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் சூதாட்டங்களில் ஈடுபட்டதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.