மதுரை: 250 நிறுவன எண்ணெய்களில் கலப்படம்.. 50 எண்ணெய்கள் உண்ண தகுதியற்றவை.. ஆய்வு முடிவில் அதிர்ச்சி

தர பரிசோதனையில் மதுரையில் உள்ள நூற்றுக் கணக்கான எண்ணெய் நிறுவனங்கள் கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரையில் செயல்படும் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் பெரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து, தமிழகம் முழுவதும் எண்ணெய் வகைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதோடு, மதுரையில் மட்டுமே நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் எண்ணெய் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, பல்வேறு புகார்களை தொடர்ந்து கடந்த ஆண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படத்திற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியத்தில் எண்ணெய் வகைகளில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 350 எண்ணெய் நிறுவனங்களில் மீண்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 250 நிறுவனங்களின் மாதிரிகள் குறித்த முடிவுகள் தற்போது வெளியான நிலையில், அனைத்து நிறுவன எண்ணெய்யும் கலப்படமானவை என்பது உறுதியானதோடு, 50 நிறுவனங்களின் எண்ணெய்கள் உண்ண தகுதியற்றதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ள 250 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்கள் ஆய்வில் துல்லியமான சோதனை முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதை மறுக்கும் நிறுவனங்கள் தாங்கள் கூறும் ஆய்வகத்தில் சோதனை செய்ய விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.முந்திரி எண்ணெய் மற்றும் பாம் ஆயில் கலந்து நல்லெண்ணெயும், ரைஸ் பிரான் ஆயில் கலந்து கடலை எண்ணெய் தயாரிப்பது, இதுமட்டுமல்லாது நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கான வாசம் வர ரசாயனங்கள் உள்ளிட்டவையும் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உதிரி எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் பொருள்களை வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version