அரசியல் அதிகாரமிக்கவர்களுக்காக புதிய மாவட்டங்களா?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகள்

எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நிர்வாக நடவடிக்கையாக தமிழக அரசு, பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. புதிய மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட, அரசு அலுவலகங்களை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கான புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட்டுள்ளது. அந்த இடம் மேலகரம் பேரூராட்சியில் குற்றாலம் மெயின் அருவி, காட்டாறு, செண்பகாதேவி அருவியிலிருந்து, தென்கால் பாசனத்துக்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைந்துள்ளது என, நெல்லை நாரணபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்கவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதித்து, வேறு பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பி உள்ளார். அரசியலில் உள்ள அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா?, புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமா எனவும் கேள்வி எழுப்பினார்.தென்காசி அரசு மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் கட்ட தடைகோரி வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. புதிய மாவட்டங்களை உருவாக்கும் போது சீரான எல்லை, வழிமுறைகள் பின்பற்ற வேண்டாமா, தென்காசி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது என சரமாரியான கேள்விகள் எழுப்பி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version