கூட்டணி குறித்து பா.ஜ.க.வில் ஆள் ஆளாக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் பதில் கூற முடியாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு நேற்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார் என ஓ.பி.எஸ்-ஐ வைத்தே சொல்ல வச்சாச்சு. நேற்று தமிழக அரசியலில் பரப்பான இந்தச் சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொன்ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகு சொல்ல வேண்டிய விஷயம். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எல்லா கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி அமைவதைதான் விரும்புவார்கள். தேர்தல் நெருங்கி வரும்போது சூழ்நிலையை பொறுத்து பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து கூட்டணி அமைப்பார்கள்.
தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பா.ஜ.க.வை பொறுத்தவரை வரும் காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தேர்தல் நெருங்கும்போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழகத்தில் பா.ஜ.க. அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும். அது அ.தி.மு.க.வாக இருக்கலாம், தி.மு.க.வாக இருக்கலாம் என்றார். இவரது கருத்து அ.தி.மு.க. தலைமைக்கு கடும் எச்சரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்தப் பதிலில், கூட்டணி குறித்து பா.ஜ.க.வில் ஆள் ஆளாக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் பதில் கூற முடியாது. கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியதே தி.மு.க.வின் சாதனை என கடுமையாக விளாசினார்.
கடந்தப் பல மாதங்களாகவே பா.ஜ.க., அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் வெடித்து வருவது, கூட்டணியில் இருகட்சிகளும் நீடிக்குமா? என்ற சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.