நடப்பு கல்வியாண்டிலே 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
தென் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி – குண்டாறு திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிச்சயமாக நிறைவேற்றும். அதேபோல், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிறைய திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துள்ளோம். தூண்டில் வளைவுகள், கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் அமைத்தல் என பலவகையிலும் அரசு உதவியாக உள்ளது. மீனவர்கள் நலன் காக்க அ.தி.மு.க. அரசைப்போல் வேறு எவரும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கமாட்டார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருதியே அ.தி.மு.க. அரசு மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதலுக்கு சட்ட முன்னோடி அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்கு தாமதமானது.
அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்கள் தான் பயில்கின்றனர். அவர்களின் மருத்துவக் கனவு நனவாக வேண்டும். நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதியைப் பாதுகாக்கவே இதைச் செய்துள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர்கூட கோரிக்கை வைக்கவில்லை. மாணவர் நலன் கருதி அரசாணை வெளியிட்டுள்ளோம். ஆனால், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். அவை எடுபடாது. இந்த ஆண்டே 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.