தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற ஐ.டி. ரெய்டில், ரூ.5 கோடி ரொக்கமும், ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 22 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனை குறித்து, மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், மொத்தம் 22 இடங்களில் கடந்த 28-ஆம் தேதி வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் கல்வி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கல்வி நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையின் முடிவில், கட்டணங்கள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்று கைப்பற்ற ஆதாரங்கள் மூலமாக தெரியவந்தது.
மேலும், கணக்கில் வராத பணம், அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டு, பின்னர் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களான, கட்டிடக் கலை வல்லுனர் ஒருவரிடமும், ஜவுளி வியாபாரி ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், தொழிலாளர்களுக்கான சம்பளம், பொருட்கள் வாங்கியது போன்றவற்றிற்கான செலவுகள் உயர்த்திக் காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இந்தச் சோதனையில், கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ததற்கான ஆவணங்களும், ரூ.5 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வங்கிகளில் உள்ள லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து வருமானவரி சோதனைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.