தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் தகுதியுடைய பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத ஆன்மிகப் பயணம் 5 பயணத் திட்டங்களாக 2025 ஜுலை மாதம் 18, 25, ஆகஸ்ட் மாதம் 01, 08 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் சென்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 11.07.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
