ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரும் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருதலைப் பட்சமாக விசாரணை நடந்ததாகக் கூறி, வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்த நிறுவனம் விடுத்த கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.