சென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்க, தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த 8 மாதங்களாக ரயில்சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட மார்க்கங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வரும் 19ம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள, முழுமையான முன்பதிவு பெட்டிகளை கொண்ட, சப்தகிரி ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 06.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி சிறப்பு ரயில் 09.40 மணிக்கு திருப்பதியை சென்றடையும். மறு மார்க்கத்தில், திருப்பதியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில் 01.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.