சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்:மீண்டும் எப்பொழுது தொடங்கும் ?

சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி பருவ ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் இடையில் நிறுத்தப்பட்டது.

சென்னை:

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு வருகிற 21 ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இறுதி பருவ தேர்வுகள் ஆன்லைனில் நடக்க இருப்பதால் மாணவர்கள் 90 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வை ஆன்லைனில் எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து அறிந்து கொள்ள மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் செப்டம்பர் 18 மற்றும் 19 ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை மாதிரி தேர்வு எழுதுவதற்காக மாணவர்களுக்கு லாகின் ஐ.டி. போன்ற அனைத்து தகவல்களும் அனுப்பப்பட்டது.

ஆனால் மாதிரி தேர்வு மாலை 4 மணி வரை தேர்வு தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாதிரி தேர்வை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாதிரி தேர்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும், எப்போது மீண்டும் நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்று(சனிக்கிழமை) தெரிவிக்கப்பட இருப்பதாகவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் மாணவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது..

மாதிரி தேர்வுக்கே இது மாதிரி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும்போது மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாதா? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version