தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது, இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்ததுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து அணைக்கு வரும்.நீர்வரத்து குறைந்தது. நேற்றைய நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 855 கனஅடியாக குறைந்து விட்டது. ஆனால் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கனஅடியாக உள்ளது இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது.
தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 3 ஆயிரத்து 614 மில்லியன் கன அடியாக இருந்தது. இவ்வாறு நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் வடகிழக்கு பருவமழையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.