சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் உள்ளது!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேரத்தின் போதும், வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதும் நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் தமிழகம்-ஆந்திரா இடையேயான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் 2 கட்டமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் சில நாட்களில் 10 டி.எம்.சி.யை எட்டிவிடும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும்.

இதில் தற்போதைய நிலவரப்படி 9.459 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. தமிழகத்துக்கு தற்போது வினாடிக்கு 557 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. அதை வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க கோரி ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஜனவரிக்குள் மீதமுள்ள 6.5 டி.எம்.சி.யை பெறுமாறு நீர்வளத்துறையிடம் ஆந்திரா அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆந்திர அரசு தரும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைப்பது இயலாத காரியம் என்பதால் ஜனவரி மாதத்துக்குள் 4 டி.எம்.சி. தண்ணீரை பெற திட்டமிட்டுள்ளோம். இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் 8 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது”, என்றார்.

Exit mobile version