2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கும். இந்தியாவில் இருந்தும் 2 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள்,
மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை பயணம் மேற்கொள்வர். ஆனால், நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், மும்பை ஹஜ் இல்லத்தில் இந்திய ஹஜ் குழுவின் கூட்டம் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர் 10 ஆம் தேதி 2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாகஇருந்தது. ஆனால், தற்போது அதை 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
ஆண் பயணிகள் உடன் வராத பெண்களுக்கான பிரிவில் (மேஹ்ரம் இல்லாத) 500 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஹஜ் 2021-க்காக பெறப்பட்டு உள்ளது. இப்பிரிவில், 2020-ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021-க்கும் செல்லும். மேலும், லாட்டரி முறையிலிருந்து இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும். இணையம், இணையமில்லா முறை, ஹஜ் கைபேசி செயலி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்தார்.