குறையுமா எரிபொருள் விலை? களமிறங்கிய ஜி7!

வாஷிங்டன்: சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அவசரக் கையிருப்பிலிருந்து 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் பொருட்களை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன. சர்வதேச எரிசக்தி முகமையுடன் ஒருங்கிணைந்து, அடுத்த நான்கு மாதங்களில் படிப்படியாக எரிபொருள் கையிருப்பு சந்தைக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

முதலில் டீசல்

முதல் 20 நாட்களுக்குள் கணிசமான அளவு டீசலைச் சந்தைக்கு விட ஜி7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட மற்ற எரிபொருள் பொருட்கள் வெளியிடப்படும்.

ஈரான் போர், பாரசீக வளைகுடா வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரஷ்யாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேசச் சந்தையில் டீசல் விநியோகம் குறைந்து விலை உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சந்தையில் உடனடி எதிரொலி

ஜி7 நாடுகளின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் குறைந்தது. கூடுதல் எரிபொருள் சந்தைக்கு வருவதால் விநியோக நெருக்கடி தற்காலிகமாகத் தணிந்து, சர்வதேச விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவசரக் கையிருப்பைக் குறைப்பது எதிர்காலத்தில் புதிய விநியோக நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என எரிசக்தித் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் விலை குறையுமா?

இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. எனவே, ஜி7 நடவடிக்கையால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு குறைய வாய்ப்புள்ளது.

ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலை உடனடியாகக் குறையும் என்று கூற முடியாது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, ரூபாய்–டாலர் மதிப்பு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள், எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் சில்லறை விலையில் மாற்றம் ஏற்படும்.

Exit mobile version