ஏதென்ஸ், அக். 23: கிரீஸில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடை 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
குழந்தைகளின் உடல்நலம் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனர்களின் வயதைச் சரிபார்ப்பதுடன், அவர்களது தனியுரிமையையும் பாதுகாக்கும் நடைமுறைகளை உருவாக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் இருப்பதாகப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார்.
வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு நிறுவனங்களுக்கு
புதிய கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, பயனர்கள் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டியுள்ளார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. வயது சரிபார்ப்புக்கான தீர்வை உருவாக்க ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து செயல்படும் ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கிரீஸும் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் இடைவிடாமல் பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் குழந்தைகளின் தூக்கம், கவனம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைப் பாதிப்பதாக கிரீஸ் அரசு கூறுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பெற்றோருக்குத் துணைநிற்பதே நடவடிக்கையின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.
முன்பே அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கு ஒப்புதல்
15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைதளத் தடையை ஜனவரி 2027 முதல் அமல்படுத்தும் திட்டத்தை கிரீஸ் அரசு கடந்த ஏப்ரல் மாதமே அறிவித்திருந்தது. தற்போது நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்திருப்பது அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.
