உக்ரைனில் மாப்பிள்ளை, கேரளாவில் மணப்பெண்; போனுக்கு தாலி… மகனுக்கு பதில் மாமனார் போட்ட கையெழுத்து!!

கொரோனா தொற்று பரவலால் ஊருக்கு வரமுடியாமல் உக்ரைன் நாட்டிலேயே சிக்கிக் கொண்ட மணமகன், அங்கு இருந்தபடியே கேரளாவில் இருந்த மணப்பெண்ணுடன் வீடியோ காலில் கனெக்ட் செய்யப்பட்டு, சட்டப்படி சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட கலாட்டா கல்யாணம் கேரள மாநிலத்தில் இப்போது நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் புனலூர் இலம்பல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஜீவன்குமாருக்கும், கேரளாவின் திருவனந்தபுரம் களக்கூட்டத்தைச் சேர்ந்த தன்யா மார்ட்டினுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. சிறப்புத் திருமணச் சட்டம் மூலம் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என கடந்த மார்ச் மாதமே இந்த ஜோடி மனு அளித்திருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஜீவன்குமாரால் சொந்த ஊருக்கு வரமுடியாத சூழல் உருவானது. இதையடுத்து ஜீவன்குமார் சார்பில் கேரளா உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், திருமணம் பதிவு செய்ய அளிக்கப்பட்ட மனுவின் காலாவதி தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும், சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மாறாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில அரசு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்டறிந்தது. விசாரணை முடிவில் ஜீவன்குமார் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

இதைத் தொடர்ந்து புனலூர் சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் ஜீவன்குமார்- தன்யா மார்ட்டின் ஆகியோரது பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜீவன்குமாருக்கு பதிலாக அவரின் தந்தை தேவராஜன் சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டார். சப் ரெஜிஸ்டிரார் பிரோஸ் முன்னிலையில் இந்த ஆன்லைன் திருமணம் நடைபெற்றது. கூகுள் மீட் மூலம் உக்ரைனில் உள்ள ஜீவன்குமாரை பார்த்தார் சப் ரெஜிஸ்டிரார் பிரோஸ். அதுபோல மாவட்ட ரெஜிஸ்டிரார் ஜான்சன் கூகுள் மீட் வழியாக மணமகனை பார்த்தார். சில நிமிடங்களிலேயே இந்த வினோத திருமண நிகழ்வு நடந்து முடிய, அதற்கான சான்றிதழை சப் ரெஜிஸ்டிரார் வழங்கி சிறப்பித்தார்.

Exit mobile version